கோதவாடியில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர், மாரியம்மன் கோயில்கள் சிதிலம்! ரூ.13.30 லட்சம் ஒதுக்கியும் பணி தொடங்காததால் மக்கள் அதிருப்தி!

Oct 27, 2026 - 22:47
 0  29
கோதவாடியில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர், மாரியம்மன் கோயில்கள் சிதிலம்! ரூ.13.30 லட்சம் ஒதுக்கியும் பணி தொடங்காததால் மக்கள் அதிருப்தி!

கோவை கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடி ஊராட்சியில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இக்கோயில்களைப் புனரமைக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சிதிலமடைந்த கோயில்களைப் புனரமைப்பதற்காக ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 02.02.2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் கனமழையால் கோயில்கள் மேலும் சேதமடைந்து, இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, கோயில்களைப் பாதுகாத்துப் புனரமைக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, கோதவாடி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கே.ஆர். ரத்தினசாமி, பி.ஏ., தலைமையில், கடந்த 23.10.2026 அன்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்டதாகவும், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து விவரம் தெரிவிக்கப்படும் என்றும் முதல்வரின் தனிப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் மேலும் சேதமடைவதற்கு முன்பாக, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோதவாடி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0