தமிழில் எலும்பியல் மருத்துவம்… 350 மருத்துவர்கள் பங்கேற்ற மாநில கருத்தரங்கம்!

Oct 5, 2026 - 16:51
 0  81
தமிழில் எலும்பியல் மருத்துவம்… 350 மருத்துவர்கள் பங்கேற்ற மாநில கருத்தரங்கம்!

கோவை தமிழ்நாடு எலும்பியல் சங்கம் சார்பில் 4வது மாநில அளவிலான எலும்பியல் தமிழ்க் கருத்தரங்கம் கோவை மெர்லிஸ் விடுதியில் அக்.3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 350-க்கும் மேற்பட்ட எலும்பியல் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

மருத்துவ அறிவியல் கருத்துகளை தமிழில் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதும், அறிவியல் தொடர்பு மொழியாக தமிழை வளர்ப்பதும் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக இருந்தது. நிகழ்ச்சியில் ‘எலும்பியல் கலைச்சொல் களஞ்சியம்’ என்ற தமிழ் மருத்துவச் சொற்களின் அகராதி வெளியிடப்பட்டது.

கருத்தரங்கிற்கு தமிழ்நாடு எலும்பியல் சங்கத் தலைவர் டாக்டர் சுந்தர் ராஜன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் டாக்டர் மாரிமுத்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர்.ஜே. சதீஷ்குமார், குழுச் செயலாளர் டாக்டர் கார்த்திக் செல்வராஜ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில்  எலும்பியல் சங்கத் தலைவர் டாக்டர் ஜெய்குமார், செயலாளர் டாக்டர் தென்னவன் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக சங்கரா கண் மருத்துவமனை பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வி. ரமணி, கேபிஆர் கல்விக் குழுமத் தலைவர் கே.பி. ராமசாமி, கங்கா மருத்துவமனை டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் நடைபெற்ற அறிவியல் அமர்வுகள் மருத்துவர்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. தமிழின் வாயிலாக எலும்பியல் மருத்துவ அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும், நவீன எலும்பியல் மருத்துவத்தின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் இக்கருத்தரங்கம் சிறந்த தளமாக அமைந்தது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0