ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்களின் கோரிக்கை நிறைவேறுமா?
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள், தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். கோவை மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தின் நிறைவில், சங்க நிர்வாகி நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், கிராமப்புறங்களில் குறைந்த மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை ஏற்று, தரம் குறையாமல் பணிகளை செய்து வருவதாக தெரிவித்தார். ஆனால், கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப பணிகளுக்கான மதிப்பீட்டு விகிதங்கள் மாற்றப்படாததால், சந்தை விலையைவிட சுமார் 20 சதவீதம் குறைவான மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பணிகளுக்கும் ஆன்லைன் டெண்டர் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், உள்ளூர் ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
எனவே, கடந்த காலங்களில் அரசு வழங்கிய சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை மீண்டும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் முடிந்த பின்னர் தணிக்கை உள்ளிட்ட காரணங்களால் தொகை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும். மேலும், பிடித்தம் செய்யப்பட்ட EMD வைப்புத் தொகையையும் விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தங்களது கோரிக்கைகள் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எதிரானவை அல்ல என்றும், ஒப்பந்ததாரர்கள் சந்தித்து வரும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண்பதே நோக்கம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0