இளமைக்கு சவால் விடும் மூத்த வீரர்கள்! கோவையில் மாநில தடகளப் போட்டி!

Nov 23, 2026 - 12:49
 0  6
இளமைக்கு சவால் விடும் மூத்த வீரர்கள்! கோவையில் மாநில தடகளப் போட்டி!

கோவையில் 44-வது மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி!

வயது ஒரு தடையல்ல... விளையாட்டுக்கு எல்லையே இல்லை என்பதைப் பறைசாற்றும் வகையில், கோவையில் 44-வது தமிழ்நாடு மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டியில், தமிழகத்தின் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில மாஸ்டர்ஸ் தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் கலந்து கொண்டு போட்டிகள் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், வயதைக் கடந்தும் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் வீரர்களின் முயற்சி, இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளில் தமிழக அணி தொடர்ந்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சாதனை படைத்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த மாநிலப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் டேராடூனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில சங்கத்தின் மூத்த உதவித் தலைவர்கள் சுந்தர், கோவிந்தராஜ், பொதுச் செயலாளர் அன்புமகன், பொருளாளர் ராஜசேகர், துணைச் செயலாளர் அண்ணாவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத் தலைவர் ராதாமணி, செயலாளர் சுகுணன், பொருளாளர் கிஷோர் குமார், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0