மேல்முடி, பெருமாள்முடி கோயில்களுக்கு கட்டுப்பாடு: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை தடாகம் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மேல்முடி அரங்கநாதர் மற்றும் ஆணைகட்டி மலைப்பகுதியில் உள்ள பெருமாள்முடி ரங்கநாதர் கோயில்களுக்கு மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் தடாகம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தடாகம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 50 கிராமங்களின் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். திமுகவைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளும் கட்சிக் கொடியுடன் பங்கேற்றனர்.
சுமார் 400 ஆண்டுகள் பழமையான மேல்முடி அரங்கநாதர் கோயிலும், பெருமாள்முடி ரங்கநாதர் கோயிலும் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படுகின்றன. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு முதல் இரண்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது சனிக்கிழமை தடாகம் வழியாக மேல்முடி செல்லும் பாதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாலமலை வழியாக 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம், வரும் சனிக்கிழமை தடாகம் வழியாக மேல்முடி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், அன்று மாலை தடாகம் பகுதியில் தனது தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0