கோவை நேரு விளையாட்டு அரங்கில் தடகளப் போட்டி! ஆர்வத்துடன் களமிறங்கிய மாணவ,மாணவியர்கள்!
கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 65-வது கோயம்புத்தூர் மாவட்ட ஜூனியர் தடகளப் போட்டி–2026, 10-வது வி. மைல்சாமி B.A., B.L. நினைவு ஜூனியர் டிராபி தடகளப் போட்டி–2026 மற்றும் 5-வது சி. சங்கரன் நினைவு சீனியர் டிராபி தடகளப் போட்டி–2026 ஆகிய போட்டிகள் கோவையில் செப்.4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகளின் தொடக்க விழா, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது தடகள திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.
இப்போட்டிகள் மூலம் கோவை மாவட்ட இளம் தடகள வீரர், வீராங்கனைகளின் திறமைகளை கண்டறிந்து, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் ரோட்டரி கிளப் லோகநாதன், கோகுல் கிருஷ்ணன், கோவை மாவட்ட தடகள சங்க செயலர் சம்சுதீன், பொருளாளர் டாக்டர் ஜான் சிங்கராயர், தொழில்நுட்ப செயலர் சீனிவாசன், நிஜாமுதீன், நந்தகுமார், துணைத் தலைவர் சரவணகாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு தடகள சங்கத்தின் திட்டமிடுதல் மற்றும் செயலாக்கத் துறை தலைவர் லதா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மாநிலப் போட்டிக்கு தேர்வு:
இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகள் திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0