கலாம் கனவை நனவாக்கும் பசுமைப் பயணம்! அன்னூரில் 10,000 மரக்கன்றுகள் நடவு!
கோவையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்னூரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பசுமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
அன்னூர் வட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பெரியம்மன் கோவில் நிலத்தில், சிறுதுளி அமைப்பு மற்றும் ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து பெரியம்மன் கோவில் வனம் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கின.
கடந்த ஆண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் மேலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அன்னூர் பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பெ. ரமேஷ், ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுமீத் பங்கா, பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவுத் தலைவர் டாக்டர் லீனா தேஷ்பாண்டே, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரித்து வரும் அன்னூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து தன்னார்வலர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளி, சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் மரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மரக்கன்றுகளை நடவு செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றைத் தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதிலும் உள்ளூர் மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அப்துல் கலாமின் கனவான பசுமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில், அன்னூரில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, இயற்கையைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைக்கு பசுமையான சூழலை வழங்கும் முயற்சியாக அமைந்துள்ளது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0