கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் ரேசிங் திருவிழா! எப்4 முதல் சுற்றில் ஆரிஸ் கிரியாகோவ் அசத்தல் ஆதிக்கம்!
கோவை
ஜே.கே. டயர் வழங்கும் இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் 2026 போட்டிகள், கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயில் விறுவிறுப்பாக தொடங்கின. இதன் முக்கியப் போட்டியான எப்4 இந்திய சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் 3 பந்தயங்கள் நடைபெற்றன.
முதல் பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜே.ஏ. ரேசிங் அணியின் தென்னாப்பிரிக்க வீரர் லுவிவே சம்புட்லா வெற்றி பெற்றார். 8-வது இடத்தில் இருந்து பந்தயத்தைத் தொடங்கிய அவர், முதல் 4 சுற்றுகளிலேயே முன்னணி வீரர்களை முந்தி முதலிடத்துக்கு முன்னேறினார். 31 நிமிடங்கள் 05.808 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து முதலிடம் பிடித்தார்.
கிச்சா'ஸ் கிங்ஸ் பெங்களூரு அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஆரிஸ் கிரியாகோவ் 2-வது இடத்தையும், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியின் 15 வயது சிங்கப்பூர் வீரர் ஆரோன் மேத்தா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
2-வது பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜே.ஏ. ரேசிங் அணியின் 15 வயது வீரர் ஆர்யன் நரோலா வெற்றி பெற்றார். 26 சுற்றுகளிலும் ஆரிஸ் கிரியாகோவின் கடும் நெருக்கடியை சமாளித்த அவர், வெறும் 0.624 வினாடிகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார். கிரியாகோவ் 2-வது இடத்தையும், ஸ்வர்ணவ் தாஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இதன் மூலம் எப்4 சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரண்டாவது மிக இளம் வயது வெற்றியாளர் என்ற சாதனையை ஆர்யன் நரோலா பெற்றார்.
3-வது பந்தயத்தில் முதல் இடத்தில் இருந்து போட்டியைத் தொடங்கிய ஆரிஸ் கிரியாகோவ், மஹ்லோரி மபுண்டாவின் கடும் சவாலை சமாளித்து முதலிடத்தைப் பிடித்தார். ஆரோன் மேத்தா 3-வது இடத்தையும், லுவிவே சம்புட்லா 4-வது இடத்தையும் பிடித்தனர் மூன்று பந்தயங்களிலும் 7 வெவ்வேறு வீரர்கள் முதல் 3 இடங்களைப் பிடித்தது, இந்த சீசனில் நிலவும் கடும் போட்டிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
மொத்தம் 6 சுற்றுகளைக் கொண்ட எப்4 இந்திய சாம்பியன்ஷிப்பின் 2-வது சுற்றும் கோவை காரி மோட்டார் ஸ்பீட்வேயிலேயே நடைபெற உள்ளது. இதனால் வீரர்களுக்கு மீண்டும் அதிக புள்ளிகளை குவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0