பாரதப் பிரதமர் மோடியின் 76 வது பிறந்த நாள் விழா
கோவை மாவட்டம் பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள்: கோவையில் தேசிய அளவிலான ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’ ஆஃப்-ரோடு பைக் ரேஸ்- சீறிப்பாய்ந்த பைக்குகள்- ஆர்வமுடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் தேசிய அளவிலான “நமோ ஆட்டோகிராஸ் 2026” (Off-Road Race) இருசக்கர வாகன பந்தயம் கோவை, சின்னியம்பாளையம் அடுத்த தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் முன்னிலையில், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் பிரனேஷ் ஏற்பாட்டில் 2-வது ஆண்டாக இப்போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளை தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா (புனே), கோவா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பந்தய வீரர்களும், சக்திவாய்ந்த வாகனங்களும் பங்கேற்றன.100 சிசி முதல் 400 சிசி வரையிலான பைக்குகளுடன் சுமார் 10 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக, சிறுவர்களுக்கான சிறப்புப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு, கரடுமுரடான பாதைகளில் வீரர்கள் சீறிப்பாய்ந்து அசாத்திய சாகசங்களைச் செய்து அசத்தினர்.
தொடர்ந்து, மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து பொதுமக்களுடன் இணைந்து நயினார் நாகேந்திரன் போட்டிகளைக் கண்டு ரசித்தார். பின்னர், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்குக் கோப்பைகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார். திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் வீரர்களின் சாகசங்களை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் பிரனேஷ், "ஆஃப்-ரோடு மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை ஊக்குவிக்கவும், கோவையில் வீரர்களின் புதிய திறமைகளை உருவாக்கவுமே இப்போட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பங்கேற்ற 4 வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளனர். இனி ஆண்டுதோறும் இப்போட்டி தொடரும்" என்றார்
மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளைத் தமிழக அரசின் விளையாட்டுத் துறையின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் முறைப்படி இணைக்க வேண்டும். இத்துறையை மேம்படுத்துவதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0