பயன்படுத்தாத தெய்வப் படங்கள், விக்ரகங்கள் சேகரிப்பு – 40 டன் பொருட்கள் மீட்பு!
கோவையில் ஸ்ரீ காமாக்ஷி ஆர்ஷ சம்ஸ்கிருதி டிரஸ்ட் சார்பில், வீடுகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தெய்வப் படங்கள், விக்ரகங்கள் மற்றும் புனிதப் பொருட்களை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்யும் ‘உத்வாசன சேவா’ சிறப்பு முகாம் கோவையில் நடைபெற்றது.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தி சேவாஸ்ரம் டிரஸ்ட் வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற முகாமில், பொதுமக்களிடமிருந்து பிரேம் மற்றும் லேமினேட் செய்யப்பட்ட தெய்வப் படங்கள், சிலைகள், உலோக பூஜைப் பொருட்கள், ஆன்மிகம் மற்றும் ஸ்லோக புத்தகங்கள், காலண்டர்கள், பஞ்சாங்கங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனர் வசுதா சுந்தர் கூறுகையில், ஸ்ரீ காமாக்ஷி ஆர்ஷ சம்ஸ்கிருதி டிரஸ்ட் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டதாகவும், காஞ்சி பெரியவரின் வழிகாட்டுதலுடன் பல்வேறு தர்மப் பிரச்சாரப் பணிகள், பயிலரங்குகள் மற்றும் வினாடி வினா போட்டிகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
உத்வாசன சேவா’ திட்டம் கடந்த 2024 ஜனவரியில் தொடங்கப்பட்டதாகவும், முறையாக பராமரிக்க முடியாத தெய்வப் படங்கள் மற்றும் விக்ரகங்களுக்கு உரிய மரியாதையுடன் வழியனுப்பு வழங்குவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
சேகரிக்கப்படும் பொருட்கள் படம், மரம், காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி உள்ளிட்டவையாகப் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி மற்றும் மறுவிற்பனைக்காக உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இதன் மூலம் புனிதப் பொருட்கள் வீணாவதும், முறையற்ற இடங்களில் வைக்கப்படுவதும் தடுக்கப்படுவதாக கூறினார்.
பெங்களூரு, சென்னையைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற முதல் சேகரிப்பு முகாமில் சுமார் 40 டன் புனிதப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வசுதா சுந்தர் தெரிவித்தார். தொடர்ந்து இந்தச் சேவையை கோவையின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0